இளைஞரின் முகத்தில் வெந்நீரை ஊற்றிய இளம்பெண்
சேலம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜனார்த்தனன்(24). இவர் அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தினமும் மது அருந்திவிட்டு நள்ளிரவு நேரத்தில் ராதாகிருஷ்ணன் வீட்டின் கதவை தட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலை சுமார் இரண்டரை மணி அளவில் ஜனார்த்தனன் மதுபோதையில் ராதாகிருஷ்ணன் வீட்டின் கதவை தட்டி மது கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் ராதாகிருஷ்ணனின் மகள் மீது கல்லைத் தூக்கிப் போட்டு மதுபானம் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த காவியா குளிப்பதற்காக தயார் செய்து வைத்திருந்த வெந்நீரை கொதிக்கக் கொதிக்க எடுத்து வந்து ஜன்னல் வழியாக ஜனார்த்தனன் மீது வீசி உள்ளார்.ஜனார்த்தனின் முகத்தின் மீதும், மார்பின் மீதும் வெந்நீர் பட்டதில் வலியால் துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முகம் மற்றும் மார்பு பகுதி வெந்து போன நிலையில் ஜனார்த்தனன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், ஜனார்த்தனன் முகத்தில் வெந்நீர் ஊற்றிய இளம்பெண்ணை கைது செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுரை கூறி காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.