புதுடில்லி: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்று அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே 13) முதல் அறிவிக்க உள்ளார்.கொரோனா பாதிப்பில் நாடு சிக்கியிருக்கும் நிலையில், அதனை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடம் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, நான்காம் கட்ட ஊரடங்கு 18ம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்றும், அது வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்த மோடி, இதற்கான திட்டங்களை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அறிவிக்க உள்ளார் என்றார்.பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மிகப்பெரிய பொருளாதார மீட்பு திட்டம் இது என பா.ஜ., தேசிய தலைவர் பாராட்டு தெரிவித்தார். அதே சமயம், ரூ.20 லட்சம் கோடிகளுக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என காங்., விமர்சித்திருந்தது. எனவே திட்டங்கள் குறித்து என்ன அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், பிரதமர் அறிவித்தபடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீளவும், வெளி மாநில தொழிலாளர்கள், ஏழை மக்கள் பயன் பெறும் வகையிலும் அவர் பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close