இன்று சென்னையில் 2 மேம்பாலங்களை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடி செலவில் கட்டப்பட்ட 2 மேம்பாலங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.தென் மாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பெருங்களத்தூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர்.
இதை கருத்தில் கொண்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே 55 கோடி மதிப்பில் உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016 செப்டம்பரில் தொடங்கியது. 6 வழிப்பாதையுடன் 711 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் பணிகள் அண்மையில் முடிந்தன. இந்நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்த வைக்கிறார். மேலும், பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 82 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையும், முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.