ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில் – அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!!!
நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா பெயரில் போலி மெயில் ஐடி உருவாக்கி மோசடி செய்ய முயன்றுள்ளது ஒரு கும்பல். நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவராக இன்னசென்ட் திவ்யா பயணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை அவரது பெயரிலான மெயில் ஐடியிலிருந்து சில மர்ம நபர்கள் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர். அதில் அமேசான் கிப்ட் கூப்பனை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். தற்போது தன்னிடம் பணம் இல்லாததால் நீங்கள் பணம் கொடுத்து கிப்ட் கூப்பனை வாங்குமாறும். அதனை தான் பின்னர் பணம் கொடுத்து உங்களிடமிருந்து பெற்றுகொள்வதாகவும் மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
அதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த இன்னசென்ட் திவ்யா தனது பெயரில் போலி மெயில் சென்றுள்ளது குறித்து நீலகிரி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
collrnlg@nic.in என்பது தனது அதிகாரபூர்வ மெயில் ஐடி என்றும், innocent divya directorexcutive356@gmail.com என்ற பெயரில் கிப்ட்கூப்பன் வாங்குமாறு மெயில் வந்தால் யாரும் அதனை திறந்து பார்க்க வேண்டாம் என்றும் லிங்கை கிலிக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுகொண்டார்.ஆட்சியர் பெயரிலான போலி மெயில் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பெயரில் மின்னஞ்சல் மோசடியும், வேலூர் மாவட்ட போதைபொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மோசடி முயற்சியும் நடந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில் கணக்கு தொடங்கி நூதன மோசடிக்கு முயற்சி நடந்துள்ளது.