அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் முன்னாள் அதிபர் டிரம்ப்?
2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பரிந்துரை பெயர் பட்டியலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்தி வரும் சிறுமி கிரெட்டா துன்பர்க், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி போன்றோர் பெயர்களும் இடம் பிடித்து உள்ளன.
பல்வேறு நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதற்கு முன்பு நோபல் பரிசை வென்றவர்கள், நோபல் பரிசுக்கு தகுதி உடையவர்களின் பெயரை நார்வே நோபல் கமிட்டிக்கு பரிந்துரைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு போட்டிக்கும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
அதோடு உலகப் பொது சுகாதார அமைப்பு, இனவெறிக்கு எதிரான இயக்கமாக உருமாறி இருக்கும் “Black Lives Matter” ஆகிய பெயர்களும் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டு இருக்கிறது. இந்த பரிந்துரைகளை நோபல் கமிட்டி வரும் அக்டோபரில் பரிசீலனை செய்து வரும் இறுதி முடிவை அறிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருதினை ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு வென்றதும் குறிப்பிடத் தக்கது.