ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கத்தை மீண்டும் அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக்காட்டுங்கள் என கொட்டும் மழையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.
திருச்சி மாநகரில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. காலை 8 மணியளவில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
அதன்பிறகு ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் வியாபாரி ஆதரவு திரட்டினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
பின்னர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகிய தெய்வங்களை வணங்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் அரங்கநாதரை தரிசனம் செய்து எனது பிரசாரத்தை மேற்கொள்கிறேன்.
இது அம்மா நின்ற தொகுதி. இந்த தொகுதி வரலாற்று சிறப்புமிக்கது. மண்ணில் இருந்து அவர் மறைந்தாலும், ஜெயலலிதா செய்த சாதனைகள் அவருக்கு புகழை சேர்த்திருக்கிறது. இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று முதல்- அமைச்சர் ஆவதற்கு துணை நின்ற, வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில் முதல்-அமைச்சராக நின்று பேசுவதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
ஜெயலலிதா இந்த தொகுதிக்கு பல திட்டங்களை தந்திருக்கிறார். கொள்ளிடம் பாலம் ரூ.100 கோடியில் கட்டினார். வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்தார். டி.என்.பி.எல். தொழிற்சாலைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தார்.
தற்போது இந்த அம்மாவின் அரசானது இந்த தொழிற்சாலையை மேலும் வரிவாக்கம் செய்ய ரூ.2 ஆயிரம் கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளது. அதேபோன்று ஜெயலலிதா திருச்சிக்கு மத்திய அரசின் சட்டக்கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி, திருவானைக் காவல் மேம்பாலம் கொண்டு வந்தார்.
முக்கொம்பு அணைக்கட்டு பழுதடைந்தவுடன் வேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு தற்போது தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. 4 மாதங்களில் அந்த பணி முடிவடைந்து முக்கொம்பு அணைக்கட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஸ்ரீரங்கம் தொகுதியில் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதியாக யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது.
இங்கு அம்மா, வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனவுடன், ஸ்ரீரங்கம் தொகுதியை அனைத்து அடிப்படை தேவைகளையும் உள்ளடக்கிய செழிப்பான பகுதியாக உருவாக்கி தந்தார்கள். ஆகவே, அ.தி.மு.க. சார்பில் இங்கே போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இந்த தொகுதி 2021 சட்டமன்றத் தேர்தலில் அம்மாவுடைய கோட்டையாக திகழ வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே.
தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவுடைய ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னால், நமக்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு இந்த தொகுதியும் பக்கபலமாக இருந்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டு, அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும், தைப் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வருகின்ற 4ஆம் தேதி முதல் வழங்கப்படும். நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன்கள் உங்கள் இல்லங்களுக்கே வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்று மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே. வெற்றி பெற செய்வீர் அ.தி.மு.க. வேட்பாளர்களை.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திரளாக கூடியிருக்கின்ற பொது மக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறும், நனைந்தவாறும் நின்று எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்ட