வெளிநாட்டில் வாழும் கிராமத்து இளைஞர்களுக்கு பாராட்டு…
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொம்பூதி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே ஒரு மாதத்திற்கு முன்பு கொம்பூதி கிராமத்திற்கும் அருகே உள்ள மற்றொரு கிராமத்திற்கும் மோதல் உருவானதால், இங்குள்ள கோயில் உண்டியல் திருடப்பட்டு, 60,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தச் செய்தி கேட்டு கவலையடைந்த வெளிநாட்டில் வாழும் கொம்பூதி கிராம இளைஞர்கள், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக சிசிடிவி கேமராக்களை கிராமம் முழுவதும் பொருத்த திட்டமிட்டனர். அதன்படி கிராமத்தில் 7 பேர் கொண்ட குழுவை உருவாக்கிய இளைஞர்கள், 24 மணிநேரமும் இயங்கும் வண்ணம், 24 சிசிடிவி கேமராக்களை கிராமம் முழுவதும் பொருத்தச் செய்தனர்.
மின்சாரம் இல்லாத நேரத்திலும் கண்காணிக்கும் வகையில், சிசிடிவி கேமராக்களுக்கென்று 6 இன்வெர்ட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா மற்றும் இன்வெர்ட்டர்களுக்கான மொத்த மதிப்பான மூன்றரை லட்ச ரூபாயை வெளிநாட்டில் வசிக்கும் கொம்பூதி இளைஞர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் கிராமத்தின் எந்தவொரு பகுதியில் குற்றச்செயல்கள் நடந்தாலும், அது சிசிடிவியில் பதிவாகி வருவதாகவும், இளைஞர்களின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது எனவும், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் வாழ்த்தினர்.
அனைத்து பிரச்னைகளுக்கும் காவல்துறையை மட்டுமே நம்பி இருந்த தங்களுக்கு, இளைஞர்கள் பொருத்திய சிசிடிவி கேமராக்களால் பாதுகாப்பாக உணர்வதாக கொம்பூதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பணம் ஈட்டுவதற்காக வெளிநாடு சென்றாலும், தங்கள் மனங்களை உள்ளூரிலேயே அந்த இளைஞர்கள் வைத்திருப்பதாகவும் அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.