பூமி கண்காணிப்பு உள்ளிட்ட 10 செயற்கை கோள்களுடன் நாளை மறுநாள் பி.எஸ்.எல்.வி.சி-49 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து, அதில் நம் நாட்டுக்கு சொந்தமான செயற்கைகோள்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான செயற்கைகோள்களையும் விண்ணுக்கு செலுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் இஸ்ரோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை நாளை மறுநாள் மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இறுதி கட்டப்பணியான கவுண்ட் டவுன் இன்று அல்லது நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நம் நாட்டுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும், வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த செயற்கைகோள் மூலம் விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.