விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்யவேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்
இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 800 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதனையடுத்து, தமிழகத்தில் இந்தப் படத்துக்கு கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. பல்வேறு தரப்பினரும் விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’நீட் தேர்வு கவுன்சிலிங்கில் எந்த தாமதமும் ஏற்படாது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்யும்.
நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக நூறாவது ஆண்டு அகில இந்திய மருத்துவ தேர்வு மையத்தை தான் கேள்வி கேட்க வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. கமல்ஹாசன் பிக் பாஸின் பி.ஆர்.ஆர். அவரை நான் பிக்பாஸ் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன். கடந்த ஆறு மாதமாக எங்கு சென்று ஒளிந்து விட்டு இப்போது வந்தவுடன் முதல்வர் வேட்பாளராக வருகிறார். அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை. விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி ரசிகர்கள் விரும்பவில்லை. தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.