மதுரையில் மக்களுக்கு இரு வண்ண அட்டை பயன்பாட்டுக்கு வழங்கப் படுகிறது. கொரோனா கொடிய தொற்று காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள், அத்திவசிய தேவைகளுக்காக வெளியில் வந்து கடைகளில் பொருள்கள் வாங்கிச் செல்கின்றனர். அதற்கு அதிக அளவில் ஒரே நேரத்தில் கூட்டமாக வந்து பொதுமக்கள் பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பதற்காக, வண்ண அட்டைகள் முறையை மதுரை மாநகராட்சி பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன்படி, திங்கள், வியாழன் ஆகிய இரு கிழமைகளில் பயன்படுத்த என்று மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்ட அட்டையும், புதன், சனிக்கிழமைகளில் பயன்படுத்த பச்சை வண்ண அட்டையும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பயன்படுத்த ரோஸ் வண்ண அட்டையும் வழங்கப் படுகிறது.மதுரை மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை இந்த அட்டைகளை பயன்படுத்த வேண்டும்.
இந்த அட்டைகள் மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் அனைவரது வீட்டுக்கே கொண்டு வந்து தரப்படும். எனவே, இந்த அட்டை பெறுவதற்க்காக பொதுமக்கள் யாரும் எங்கும் அலைய வேண்டாம் என்று மாநகராட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.