மகனை சுத்தியால் அடித்துக் கொலைசெய்த தந்தை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி மண்டலம், சின்னமுஷிடிவாட சத்யநகரில் வசித்து வருபவர் போரிபதி வீரராஜு. 72 வயதான வீரராஜு கடற்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அதன்பின்னர் இவர் தனது மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.மகன் ஜலராஜு மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வீரராஜு வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தந்தை வீரராஜு மகன் ஜலராஜூ ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக வீரராஜும் – ஜலராஜும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர். இந்நிலையில் ஜலராஜு. வீட்டின் வெளியில் வராண்டாவில் இருந்தபோது, அவரது தந்தை வீரராஜு பின்னால் வந்து சுத்தியலால் ஜலராஜூ தலையில் நான்கு முறை தாக்கினார்.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த கசிவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே ஜலராஜு சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை பெந்துர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்வதற்குள் ஜலராஜு உயிரிழந்தார். வீரராஜு பெந்துர்த்தி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். கோபாலபட்டணம் இன்ஸ்பெக்டர் மல்லா அப்பாராவ் மற்றும் பெந்துர்த்தி எஸ்.ஐ.க்கள் ஸ்ரீனு, ஹரிகிருஷ்ணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவரங்களை சேகரித்து ஜலராஜுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜலராஜு மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் வீரராஜு மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.