பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது!!!
பெரிய வெங்காயம் மழை காரணமாக மூன்று மடங்காக உயர்ந்து ஒரு கிலோ 50 ரூபாய் வரை விலையேற்றம் அடைந்துள்ளது. இது 100 ரூபாய் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் பிரபலமானதாக விளங்குகிறது. இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி பகுதி மட்டுமின்றி சின்னசேலம், பெரம்பலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நாட்டு ரகம் மற்றும் ஆங்கில காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அறுவடை காலங்களில், தினமும் 100 டன் அளவுக்கு தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கொள்முதல் செய்யும் காய்கறிகள், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதேபோல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வியாபரிகள் கொள்முதல் செய்யும் பெரிய வெங்காயம் தலைவாசல் தினசரி மார்க்கெட் மூலம் தஞ்சாவூர்,சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்து போனது.
அதனால் விலையேற்றம் அடைந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மொத்த விலையில் ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் தற்போது மூன்று மடங்காக உயர்ந்து தரத்திற்கேற்ப மொத்த விலையில் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரைக்கும், சில்லரை விலையில் ஒரு கிலோ 60 ரூபாய் வரை விலையேற்றம் அடைந்துள்ளது. அதனால் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் இதே நிலை நீடித்தால் ஒரு கிலோ 100 ரூபாய் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.