தமிழ்நாடு

பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசியவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் – ராமதாஸ்

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியதற்காக, பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, பா.ஜ.க தொழில்நுட்ப பிரிவு சார்பில் சிறையிலடைக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் நேற்றிரவு பெரியார் சிலைக்கு சிலர் காவிச் சாயம் பூசியுள்ளனர். உடனடியாக அங்கு வந்த பொதுமக்கள், திமுக தொண்டர்கள் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தினர். திமுக எம்எல்ஏ செந்திலும் அங்கு வந்து பார்வையிட்டார். சிலையின் மீதுள்ள காவிச்சாயம் அகற்றப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில், ‘திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலை செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சுக்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். திருச்சி இனாம்புலியூரில் கடந்த மாதம் இதே நாளில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், இன்றைய நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், ‘திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி களங்கப்படுத்தியிருப்பது வகுப்புவாத சக்திகளின் வெறிச் செயலாகவே நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த மாதம் திருச்சி மாவட்டம், இனாம்புலியூரில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதற்கும் இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இத்தகைய குற்றங்களை செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிற வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்ச் சமுதாய மக்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதியை தம் வாழ்நாள் முழுவதும் போராடி பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட மதவாத சக்திகளால் ஏற்பட்டிருக்கிறது. தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.