பெண் குழந்தைகளுக்கு எதிராக வெளிப்படையாக விடுக்கப்படும் மிரட்டல்கள்!!!
சமூகவலைதளங்களின் மூலம் பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனிப்பட்ட ஒருவரை விமர்சிக்க அவர்களின் குடும்பங்களை இழுத்து மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகியுள்ளன. சமூக வலைதளங்களில் போலிக்கணக்குகளை தொடங்கி தனக்கு பிடிக்காதவர்களின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து கூறுவதாக நினைத்து பாலியல் வக்கிரத்துடன் சில விஷமிகள் ஆபாசமாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்
நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார். இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டர்வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதியின் மகள் குறித்து மிகவும் வக்கிரமாக டுவிட்டரில் விமர்சனம் செய்த ரித்திக் என்பவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது கனிமொழி எம்.பி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கருத்து வேறுபாட்டை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு சப்போர்ட்டா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை யாரும் மாற்றப்போவதில்லை. ஒரு குழந்தையை பாலியல் செய்வது பற்றி பொதுவில் சொல்லக்கூடிய இந்த நபர் ஒரு குற்றவாளி. இவ்வாறு பேசக்கூடிய ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள். எப்படி ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியாக ஆண்களால் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதைப்பார்த்து மவுனமாக இருப்பது வெட்கக்கேடான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.
சைபர் நிபுணரும், சைபர் குற்றங்களைக் கையாளும் வழக்கறிஞருமான கார்த்திகேயன், “தொடர்ச்சியாக சைபர் குற்றங்களைப் பற்றிய புகார்கள் அவசியமாகின்றன. தனிப்பட்ட தகவல்களை அதிகமாக இணையத்தில் பகிர்வது தடுக்கப்படவேண்டும். அதை மீறி சைபர் தாக்குதல் நடக்கும் பட்சத்தில் புகார் அளிக்கக் தயங்கத் தேவையில்லை. புகார்கள் அதிகரிக்கும்போது, சைபர் குற்றங்களை கையாள வேண்டிய அவசியத்தையும் காவல்துறைக்கும், சமூகத்துக்கும் நாம் நினைவுபடுத்துகிறோம்” என்றார்.