ஊரடங்கினால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் சாலைகளில் சுற்றி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெங்களூர் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சசிரேயனபாளையா என்னும் பகுதியில் வசிப்பவர் சந்திரசேகர். இவருக்கு ஹேமந்த் (3 வயது) என்ற மகன் உள்ளான்.
சந்திரசேகரின் வீடு வனப்பகுதி அருகில் உள்ளது. இந்த நிலையில் அதிகாலை வீட்டுக்குள் ஒரு சிறுத்தை புகுந்துள்ளது. வீட்டில் புகுந்த சிறுத்தை ஹேமந்தை தூக்கிச்சென்றது. வெயில் காலம் என்பதால் காற்றோட்டமாக கதவை லேசாகத் திறந்து உறங்கியுள்ளார். வீட்டினர் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் சிறுவனை தூக்கிச்சென்றது யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து குடும்பத்தினர் சிறுவனை அக்கம், பக்கம் தேடினர். அங்கு ஒரு மரத்தடியில் கடித்து குதறிய நிலையில் சிறுவனின் சடலம் கிடைத்தது.
சடலத்தின் அருகில் சிறுத்தையின் காலடித்தடங்களும் இருந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கர்நாடக வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் மற்றும் பெங்களூரு புறநகர் தொகுதி எம்.பி. டி.கே.சுரேஷ் ஆகியோர், குழந்தையின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
இறந்த 3வயது ஹேமந்த் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மந்திரி ஆனந்த்சிங் அறிவித்துள்ளார்.