புவனேஸ்வர் மாவட்டம் பூங்காக்களுக்குச் செல்ல முதியவர்களுக்கு தனிநேரம் அறிவிப்பு…
புவனேஸ்வரில் பூங்காக்களுக்குச் செல்ல முதியவர்களுக்கு தனிநேரம் ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் குறித்து மாநில அரசு அறிவித்து வரும் நிலையில், ஒடிசாவில் வார நாள்களில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவர்களுக்கு கரோனா தொற்று எளிதாகப் பரவும் என்பதால் அவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்கும்பொருட்டு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை மூத்த குடிமக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியில் மற்ற வயதினர் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மேலும், திங்கள் முதல் வெள்ளி வரை, வார நாள்களில் பூங்காக்கள் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும் என்றும் பூங்காவிற்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலும் 90 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,478 ஆக அதிகரித்துள்ளது.