பாஜக & அதிமுக இடையே வெடித்த வார்த்தை மோதல்…
தமிழக அரசியல் கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என பாஜக – அதிமுகவினர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, டெல்லிக்கே ராஜா என்றாலும், தமிழகத்தில் பாஜக இன்னும் வளர வேண்டுமென விமர்சித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக அமைச்சர்கள் சிலர் அத்துமீறி பேசி வருவதாக கூறினார். அதேசமயம், அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும் சுமூகமாக இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இதனிடையே, அடுத்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக மீண்டும் கூறிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக ஆட்சி நிறைகளும், குறைகளும் இணைந்த ஆட்சியாக உள்ளதாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய திமுக, தற்போதும் அதன் தோழமை கட்சிகளை தக்கவைத்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சியினர் தெரிவித்து வரும் மாறுபட்ட கருத்துகளால், அந்த கூட்டணி அடுத்த தேர்தலில் நீடிக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.