பாகுபலி படத்தை எடுத்தபோது என்ன நடந்ததுனு தெரியுமா?

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாகுபலியின் பிரமாண்ட வெற்றியை பார்த்து பாலிவுட்காரர்கள் எல்லாம் வியந்து போனார்கள்.
பாகுபலி படம் ரிலீஸானதில் இருந்து கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கேள்விக்கு பதில் கிடைக்க இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பாகுபலி 2 படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. பாகுபலியை போன்றே அதன் இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

பாகுபலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷோபு எர்லகட்டா கூறியதாவது, பாகுபலி படத்தின் கதையை மூன்று மணிநேரத்தில் சொல்லி முடிக்க முடியாது என்று நினைத்தோம். இதையடுத்து பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடியுமா என்று ஆலோசித்தோம். அதன் பிறகு இரண்டு பாகங்களில் தான் பாகுபலியை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். பாகுபலி படத்தை ஷூட் செய்தபோதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளில் 30 சதவீதத்தை படமாக்கிவிட்டோம். இரண்டு பாகங்களையும் ஒன்றாக படமாக்கி அதன் பிறகு முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை துவங்குவது என்று தான் திட்டமிட்டோம். ஆனால் பட்ஜெட் மற்றும் நேரத்தால் இரண்டு பாகங்களையும் சேர்த்து ஷூட் செய்வதை நிறுத்தினோம்.
பாகுபலி படம் ரிலீஸாகி ஐந்து ஆண்டுகள் ஆனதை படக்குழு கடந்த 10ம் தேதி கொண்டாடியது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரபாஸ், தமன்னா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பாகுபலி படத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா இடையேயான கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது. அந்த படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதை பிரபாஸும், அனுஷ்காவும் மறுத்தார்கள். ஆனால் பிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.



