கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவுடன் வந்த மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு (பிஎஸ்எப்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் மேற்கு வங்கம் வந்தனர்.
கோல்கட்டா, 24 பர்கானா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது மத்தியகுழுவுடன் வந்த பாதுகாப்பு படை வீரர் (பிஎஸ்எப்) கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிஎஸ்எப் பிரிவில் ஓட்டுநராக இருக்கும் இவர்தான் மத்தியகுழு செல்லும் வாகனங்களை ஓட்டுபவர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பிஎஸ்எப் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து உடனடியாக அந்த பிஎஸ்எப் வீரர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பிஎஸ்எப் வீரர், மற்ற வீரர்களுடன் தொடர்பில் இருந்ததால் 50 வீரர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மத்தியக் குழுவுக்கும் மேற்கு வங்க அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 50 பேரில் 20 பேருக்குப் பரிசோதனை நடந்துள்ள நிலையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.