தமிழகத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி வரை மொத்த பாதிப்பு 3,67,430 ஆகவும், இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,677 ஆகவும் உள்ளது. அன்றாடம் 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்று கண்டறிப்படும் எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் அதேவேளையில் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆகஸ்ட் 2ம் தேதி வரை தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை 100க்குள் இருந்து வந்தது. பின்னர், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் கடந்த 19 நாட்களாக தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை என்பது நாள்தோறும் 100க்கும் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6,340 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில், கடந்த 19 நாட்களில் மட்டும் 2,208 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 127 பேரும், 16ம் தேதி 125 பேரும் உயிரிழந்துள்ளனர். ஜுன், ஜுலை மாதங்களை விட ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.