சுவரொட்டிகளை கிழித்த திமுகவினர் கைது…
கோவை காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. மு.க.ஸ்டாலினை இம்சை அரசன் 23 ம் புலிகேசியாகவும், தி.மு.க பொதுச்செயலாளர் துரை முருகனை மங்குனி அமைச்சராகவும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா? துண்டுச்சீட்டு தலைமையா என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இதேபோல மற்றொரு சுவரொட்டியில் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி படத்துடன் உழைப்பை நம்பலாமா? பிறப்பை நம்பலாமா என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையிலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில், எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை.
இதையடுத்து காந்திபுரம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த இந்த சுவரொட்டிகளை தி.மு.கவினர் கிழித்து எறிந்தனர். இந்நிலையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு சுவரொட்டியை கிழித்ததோடு, அ.தி.மு.க பகுதி செயலாளர் சீனிவாசன் என்பவரை இழிவாக பேசியதாக பஷீர் என்பவரை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல செல்வபுரம் பகுதியில் சுவரொட்டிகளை கிழித்த மின்னல் சிவா, கேபிள் மணி உள்ளிட்ட 4 பேர் மீது செல்வபுரம் காவல் துறையினரும், குனியமுத்தூர் பகுதியில் 7 பேர் மீது குனியமுத்தூர் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 12 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுவரொட்டிகளை கிழித்த தி.மு.கவினரை காவல் துறையினர் கைது செய்ததை கண்டித்து, நாளை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென தி.மு.கவினர் அறிவித்துள்ளனர். காவல்துறையினர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘கழகத்தை அவதூறுசெய்யும் நோக்கில் அடிமைகள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த கோவை இளைஞரணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி காலை பிடிப்பவர் எடப்பாடி. அவரின் காலை தொழுபவர் வேலுமணி. அவர் சொல்வதை கேட்டு கரைவேட்டி கட்டாத அதிமுகவாக செயல்படும் கோவை காவல்துறையை கண்டிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.