சிறையில் உயிரை விட்ட லலிதா ஜூவல்லரி கொள்ளையன்…
திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நள்ளிரவில் சுவரை துளையிட்டு ₹13 கோடி மதிப்புள்ள, 28 கிலோ தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்ந கொள்ளையை திருவாரூர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளைக்கு உதவிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், முருகன் அக்கா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். முருகன் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார்தீவிரமாக தேடி வந்த நிலையில் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான முருகனின் அக்கா மகன் சுரேஷும் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு போலீசாரின் விசாரணைக்கு பின்னர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பெங்களூரு நீதிமன்ற அனுமதியுடன் முருகன் திருச்சி அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின்போது திருவெறும்பூர் அருகே காவிரிக்கரையோரம் (மலம் கழிக்கும் பகுதியில்) புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து சுரேஷ், கணேசன், மணிகண்டன் ஆகியோரிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்,இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷ்னல் வங்கியிலும் பின்பக்க சுவரை துளையிட்டு தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது கர்நாடகாவில் – 72 வழக்குகள், தமிழகத்தில் – 17 வழக்குகள், ஆந்திராவில் – 4 வழக்குகள் என பதிவானவை மட்டும், 93 வழக்குகள். இதில் பல வழக்குகளில் முருகன் தண்டனை பெற்றுள்ளார். அக்கா மகன் சுரேஷுன் இணைந்து சினிமா எடுக்க முயற்சித்த முருகனுக்கு நடிகைகள் தொடர்பு, போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு என்றும் தகவல்கள் வெளியாகின. முருகனிடமிருந்து போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விபரமும் வெளியானது. இது குறித்தும் போலீசார் ஒருபக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி வழக்குககளில் முருகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்தது. ஆனாலும் பிற வழக்குகளால் விடுதலை ஆக முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், முருகன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவாக இருந்தார். பெங்களூரு சிறையில் இருந்த அவர் உடல்நலக்குறைவு மோசமானதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வு முடிந்து உடலை திருவாரூர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுவதாக முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.