காங்கிரசில் மீண்டும் சச்சின் பைலட்…
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேருடன் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விடுதியில் தங்கினார். இதன் காரணமாக, துணை முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அசோக் கெலாட் அரசு கவிழும் சூழல் இருந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் நேற்று சந்தித்துப் பேசினார்.
ராகுல் காந்தியின் இல்லத்தில் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பிரியங்கா காந்தி உள்ளி்ட்டோரும் உடனிருந்தனர். அப்போது, எதிர்கால முதல்வர் என்று தன்னை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை சச்சின் பைலட் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக பணியாற்றுவதாக சச்சின் பைலட் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார். சச்சின் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க கட்சித் தலைவர் சோனியாகாந்தி முடிவுசெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தி, வேணுகோபால், அகமது படேல் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.