இ-பாஸ் புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன…
தமிழகத்தில் முக்கிய பணிகளுக்கு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவத் தேவை போன்றவை தவிர மற்ற பயணங்களுக்காக விண்ணப்பித்தால் இ பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு இன்று முதல் அமலாகியுள்ள நிலையில், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இ பாஸ் கிடைக்க விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணுடன், செல்போனின் எண்ணை பதிவிட்டால், உடனடியாக இ பாஸ் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு பழைய இ-பாஸ் நடைமுறையே தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.