சென்னை மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் கடை பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனா தொற்றுக்கு பலியானதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இந்த நிலையில் ஜன்னல் கடை பஜ்ஜிக்கடை உரிமையாளர் தான் நலமாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு பலியானது தனது சகோதரர் என்றும் பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் அருகே அமைந்துள்ளது ஜன்னல் கடை பஜ்ஜிக்கடை. கடந்த பல ஆண்டுகளாக இந்த கடை அந்த பகுதியில் புகழ் பெற்றது. இந்த நிலையில் இந்த கடையின் உரிமையாளர் சிவராம கிருஷ்ணன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் உண்மையில் மறைந்த சிவராம கிருஷ்ணன் என்பவர் அந்த கடையின் உரிமையாளர் சந்திரசேகரன் என்பவரின் சகோதரர் என்றும், மறைந்த சிவராமகிருஷ்ணன் ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் ஓய்வு நேரத்தில் பஜ்ஜிக்கடையில் தனது சகோதரருக்கு உதவி செய்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பலியானவர் சிவராம கிருஷ்ணன் என்றாலும் ஒருசில ஊடகங்களில் சந்திரசேகரன் புகைப்படம் வந்ததால் குழப்பத்திற்கு முடிவுகட்ட தற்போது சந்திரசேகரன் இதுகுறித்து மரணம் அடைந்தது தனது சகோதரர் என்று விளக்கமளித்துள்ளார். மேலும் தான் நலமாக இருப்பதாகவும், இருப்பினும் தனது சகோதரரின் மறைவு காரணமாக குடும்பமே சோகத்தில் இருப்பதால் இன்னும் ஒரு மாதம் கழித்தே கடை திறக்கப்படும் என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.