“அரசியலுக்கு பிடிகொடுக்காத பிடிவாதக்காரர் ரஜினிகாந்த்” – வைரமுத்து புகழாரம்!
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்திற்கு வந்து நேற்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து அவரை பாராட்டி கொண்டாடினர். அதேபோல தென்னிந்திய நடிகர்கள், தமிழ் திரையுலக நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் முக்கிய பிரபலங்கள் என அனைவரும் அவருடைய 45 ஆண்டுகால திரையுலக பயணத்தை பாராட்டும் வகையில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கு நேற்று நடிகர் ரஜினிகாந்த் நன்றியை தெரிவித்து நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற பதிவையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து நடிகர் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரைப்படத்திற்கான வாழ்த்துக்களை கவிதையாக வெளியிட்டிருக்கிறார்.
நகலெடுக்க முடியாத உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய் மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத் தனிமைப் பேச்சிலும் அரசியலுக்குப் பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி; வியப்பின் கலைக்குறியீடு!
இதில் அரசியல்ப்ரீதியான கருத்தையும் வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதாவது இரண்டு மணி நேரம் தனிமையில் பேசியபோதும் அரசியலுக்கு பிடிகொடுக்காத பிடிவாதம் ரஜினிகாந்த் அவர்களுக்கு உரிய ஒன்றாக இருப்பதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த தலைவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் இரண்டு மணி நேரம் பேசினார்கள் என்ற தகவலை அவர் குறிப்பிடவில்லை. இது எப்பொழுது நடந்தது என்றும் கூறவில்லை. எனவே சமூக ஊடகங்களில் இந்த கேள்வி குறித்த கருத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.