வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி…
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு , தயாராகும் விதமாக அரசியல் கட்சிகள் பணிகளை மும்முரமாக செய்ய தொடங்கிவிட்டனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி என அறிவித்து, 117 சட்டமன்ற தொகுதியில் ஆண் வேட்பாளர்களும், 117 சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் அரசியல் கட்சியாக பல தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை அறிவித்து கிராமங்கள் தோறும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓப்புதலுடன், மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அந்த மாவட்ட தலைவர்களே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பொறியாளர் ஜவஹர் சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பொறியாளராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அங்கிருந்து கட்சி பணிகளைச் செய்து வந்த ஜவஹர், அமெரிக்கா வேலையை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
மேலும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக மருத்துவர் சிவக்குமார் களஞ்சியம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து சீமானுடன் நெருக்கமாக இருந்து, அவருடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வருபவர். திரைப்பட நடிகர் ஆர்.கே சுரேஷின் சகோதர்தான் சிவக்குமார் களஞ்சியம். அதேபோல், அறந்தாங்கி, மானாமதுரை, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல சட்டமன்ற தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள், சட்டமன்ற தொகுதியிலுள்ள கிராமங்கள் தோறும் சென்று கட்சிக் கொடிகளை ஏற்றி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகூட தொடங்காத நிலையில், வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் பணியைத் தொடங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.