வருமான வரித்துறை அதிகாரிகள் எனும் பேரில் கொள்ளையடித்த கும்பல்.. சிக்கியது எப்படி?
2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி, சிபிஐ அதிகாரிகள் என்ற பெயரில் 6 பேர் ஒரு காரில் காளீஸ்வரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். பீரோக்களின் சாவியைக் கேட்டபோது மனைவியிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அவர்களும் காரில் அங்கன்வாடிக்கு சென்று அருணாதேவியை அழைத்து வந்துள்ளனர். பீரோக்களில் இருந்த 15 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். அவர்கள் சென்ற பின்புதான் போலி சிபிஐ அதிகாரிகள் என்பது தெரியவர, காளீ்ஸ்வரன் திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தார். ஓராண்டு காலமாக இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் அமைக்கப்பட்ட தனிப்படை மூலம், திருப்பூர் மற்றும் கோவையில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.
காளீஸ்வரன் – அருணாதேவி தம்பதியின் உறவினர்களான 40 வயதான கோபி, 39 வயதான மாலதி, 23 வயதான வினோத், 34 வயதான ஐயப்பராஜன், 27 வயதான முத்துக்குமார், 48 வயதான குகன்செட்டி ஆகிய 6 பேர் கைதாகியுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து ஐந்தரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 100 பவுன் நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்துமே, காளீஸ்வரன் வீட்டில் கொள்ளையடித்த நகை, பணத்தில் வாங்கியவை என குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனால் காளீஸ்வரனோ தனது புகாரில், 15 பவுன் நகைகளும் ஒரு லட்சம் ரூபாயும் மட்டும்தான் திருடு போயுள்ளதாக தெரிவித்திருந்தார். அதனால் காளீஸ்வரனுக்கு அவரது வருமானத்தை விட அதிகமான சொத்துக்கள் கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் குறித்தும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரிக்க உள்ளனர். இந்தக் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படைப் பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.