வரதட்சணை கொடுமைக்கான தண்டனை உயர்த்த பரிந்துரை – முதல்வர் பழனிசாமி
வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம், அரசு சேவை இல்லங்கள், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டுவருகிறது.நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 ஆகியவையும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யும் வகையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை மேலும் கடுமையாக்க மத்திய அரசின் அனுமதி பெற்று சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார். அதிமுக அரசு பெண்கள், குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களை காக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.