“ரூபாய் நோட்டுக்கள்” மற்றும் பலரும் தொடக்கூடிய பொருட்களில் கிருமி நீக்கும் கருவி…!
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரசின் பிடி இன்னும் தளர்ந்தபாடில்லை. கொரோனாவின் தாக்கம், இரண்டு ஆண்டுகள் வரைகூட நீடிக்கலாம் என தொற்று நோயியலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், பலரும் தொடக்கூடிய பொருட்கள் மூலம் கொரொனா பரவுவதை தடுப்பது அவசியமாகி உள்ளது.இதற்கென ஹைதராபாதிலுள்ள, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆராய்ச்சியாளர்கள், இரண்டு வகை புறஊதாக் கதிர் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.
துருவ்ஸ்: இதில் ‘துருவ்ஸ்’ (DRUVS) என்ற கருவி, மொபைல், லேப்டாப், டேப்லட் போன்ற கருவிகளை சில நொடிகளில் சுத்தம் செய்யும் திறன் கொண்டது.பெட்டி வடிவில் உள்ள துருவ்ஸ் கருவியின் அருகே கையை கொண்டு சென்றால், அதில் உள்ள உணரிகள், கதவை திறக்கும். சுத்தப்படுத்தவேண்டிய பொருளை உள்ளே வைத்தும், தானே மூடிக்கொள்ளும். வைக்கப்படும் பொருளின், 360 கோணத்திலும் புறஊதா கதிர்களை பாய்ச்சி சுத்தம் செய்த பிறகு, தானே அணைந்துவிடும்.
கிளீன் நோட்:அதே போல, ‘கிளீன் நோட்’ என்ற கருவி, ரூபாய் நோட்டுக்கள், காகிதங்கள் போன்றவற்றை தனித்தனியாக தானே எடுத்து புறஊதா கதிர்களை பாய்ச்சி சுத்தம் செய்யும்.செறிவான புறஊதா கதிர்களை, 30 விநாடிகளுக்கு மேல் பாய்ச்சினால், பெரும்பாலான பேக்டீரியாக்கள், வைரஸ்களை கொன்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.