சோறு போடாத மனைவியை பழிவாங்க தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
சென்னையில் உள்ள முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு திடீரென மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இந்த அழைப்பில் பேசிய மர்மநபர் தமிழக முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் அதனை கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டார்.
இதனை அடுத்து அந்த எண்ணை டிரேஸ் செய்த போலீசார், அந்த அழைப்பு சேலையூர் பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவருடைய மொபைல் என தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக வினோத் கண்ணன் வீட்டிற்கு சென்ற போது முதலில் தான் வெடிகுண்டு மிரட்டல் விடவில்லை என மறுத்த நிலையில் அதன் பின்னர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்
பிறகு அவரிடம் விசாரணை செய்தபோது ’தனது மனைவி தனக்கு சாப்பாடு போடவில்லை என்றும், அதனால் மனைவியை பழி வாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு வெடி குண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே இவர் கடந்த ஆண்டும் இதே போல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தமிழக முதல்வர் வீடு உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்