முடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை!
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்த அவரிடம் விடுதலை செய்யப் படுவதற்கான கோப்புகளில் சிறைத்துறை நிர்வாகிகள் கையெழுத்து வாங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு கடந்த 20 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இவருக்கு மூச்சு திணறல் இருப்பதாகக் மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. முதலில் நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் உடல் நலம் தேறி வந்தார். இதனால் நேற்று அவர் சாதாரண வார்டிற்கும் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்றுடன் சசிகலாவின் சிறை தண்டனை முடிவடைகிறது. இதனால் விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறப்பட்டவுடன் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருடன் சிறை தண்டனை பெற்ற இளவரசி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி விடுதலையாவார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும் ஏற்கனவே தண்டனை காலம் முடிந்து அபராதத் தொகை செலுத்தாத காரணத்தினால் சிறையில் இருக்கும் சுதாகரன் நேற்று மாலை வரை அபராதம் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடைய விடுதலை கேள்விக்குரியாக மாறி இருக்கிறது.