குன்றின் உச்சியில் நின்று இளைஞர் ஒருவர் தலைகீழாக சுழலும் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டுவருகிறது.
பல காரணங்களுக்காக இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாவது வழக்கமாக இருக்கிறது. சில சமயங்களில் ஒருவரை பாராட்டுவதற்காகவும் அவர் செய்யும் சாகசத்தை அங்கீகரிப்பதற்காகவும் வீடியோக்கள் வைரலாகும். அதே சமயத்தில், ஒருவரின் ஆபத்தான முயற்சி குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கும் சில சமயங்களில் வீடியோக்கள் வைரலாகிறது.
அந்த வகையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி, இணையவாசிகள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. RPG குழும தலைவர் ஹர்ஷ் கொயாங்கா, சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் குன்றின் உச்சியில் நின்று தலைகீழாக சுழலுகிறார். இறுதியில் வெற்றிக்கான சின்னத்தை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
அந்த வீடியோவைப் பதிவிட்டிருந்த கொயாங்கா, “அவரது செயல் போற்றப்பட வேண்டுமா அல்லது முட்டாள்தனமாக கருதப்பட வேண்டுமா என்று யோசிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மிகவும் ஆபத்தான முறையில் இதுபோன்ற சாகச முயற்சியில் தற்காலத்து இளைஞர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதுபோன்ற ஆபத்தான விஷயங்களில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் அதனால் பேரிழப்பு ஏற்படுவது அவர்களின் குடும்பத்தினருக்கே என அந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.
மேலும் பலரோ, “இது முழுக்க முழுக்க முட்டாள்தனமே. ஆபத்தை உணராமல் இதுபோன்று செய்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலரோ, “செயலைச் செய்த நபரும் வீடியோவைப் பதிவுசெய்த நபரும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளனர்.