“மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தென்மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, முதற்கட்டமாக திண்டுகல்லில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். வருவாய்த்துறை, ஊரக மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கட்டப்பட்ட 8 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டங்களையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, நிலக்கோட்டை, கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகங்கள், திருமணிமுத்தாறு வாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்த அவர், கொரோனா தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் இதுவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்பதில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார். கு.க.செல்வம் பாஜக தலைவரை சந்தித்தது உட்கட்சி விவகாரம் என்றும் நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் ஏற்போம் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டுமென எஸ்.வி.சேகர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர், ஏதாவது பேசுவது, வழக்கு என்றால் ஓடிச்சென்று ஒளிந்துக் கொள்வதே அவர் வழக்கம் என சாடினார்.
திண்டுக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்து மதுரை சென்ற முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர் அலுவலத்தில் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர், மதுரையில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்தார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். வெள்ளிக்கிழமை (இன்று) நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.