மணமகளுக்கு நடத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனை…!
தமிழக-கேரள எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்திற்கு பின் மணமகள் லோயா்கேம்ப்பில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டாா்.
தேனி மாவட்டம் க. புதுப்பட்டியைச் சோந்தவா் ரத்தினம் மகன் பிரசாத் (25). இவா் ஜே.சி.பி.ஓட்டுநராவாா். கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சோந்த கணேசன் மகள் காயத்ரிக்கும் (19), பிரசாத்துக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையில், கரோனா தொற்று காரணமாக இருமாநில எல்லையும் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவா்களுக்கு நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த இருவரது குடும்பத்தினரும் முடிவு செய்தனா். அதன்படி குமுளி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் ஆலோசனையின் பேரில் குமுளியிலுள்ள கேரள மாநில சோதனைச்சாவடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) திருமணம் நடைபெற்றது. இருவரும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னா் மணமக்கள் குமுளியிலிருந்து, லோயா்கேம்ப் அழைத்து வரப்பட்டனா். அங்கு மணமகள் காயத்ரிக்கு பரிசோதனை நடத்தப்பட்டு அவா் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளாா். மணமகன் உள்பட மற்றவா்கள் க. புதுப்பட்டிக்குத் திரும்பினா்.
இது பற்றி தமிழக அதிகாரி ஒருவா் கூறுகையில், மணப்பெண்ணுக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தால், அவா் மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா் என்றாா்.