இந்தியாதமிழ்நாடு

மக்களுக்காவே சேவை செய்த டாக்டர் இளைஞர் , மனிதத்தை மறந்த ஊர் மக்கள், விபரீதமான முடிவு செய்த தாய் !

காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவர் உடலை அடக்கம் செய்யச் சொந்த கிராம மக்களே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம், மனிதத்தை நாம் மறந்து விட்டோமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த வாசுதேவன். இவரின் மகன் ஜெயமோகன். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ள, ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அவர், கடுமையான காய்ச்சல் காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால்  ஜெயமோகனுக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. ஆனால் அவருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் வெளிநாட்டுக்கோ, தனியார் மருத்துவமனைக்கோ செல்லாமல், அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்ய, சாலை வசதி கூட இல்லாத தெங்குமரஹாடா என்ற மலைக் கிராமத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணி செய்து வந்தார்  ஜெயமோகன்.அவரது  சேவையை மறந்து மக்கள் இவ்வாறு செய்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

டெங்குகாய்ச்சலால் இறந்த இளம் மருத்துவர் ஜெயமோகனின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான சிறுமுகை கிராமத்திற்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றுள்ளார்கள். அப்போது ஜெயமோகனின் உடலை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மக்களுக்காகப் பணி செய்த எனது மகனிற்கு இந்த நிலையா என்பதை அறிந்து மனமுடைந்த அவரின் தாய், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .

கொரோனாவால் இல்லை டெங்குகாய்ச்சலால் தான் ஜெயமோகன் இறந்தார் என, உறுதி செய்த பின்பு தான் ஜெயமோகனின் உடலைக் கிராம மக்கள் ஊருக்குள் அனுமதித்தனர். அதன்பின்பு அவரது உடல் எரியூட்டப்பட்டது. மக்களுக்காகவே தனது இளமைக் காலம் முழுவதையும் செலவழித்த ஜெயமோகனின் இறுதி சடங்கிற்கு மரியாதையை செலுத்தவேண்டிய ஊர் மக்கள் இவ்வாறு செய்தது மிகவும் வேதனை அளிக்கும் விதத்தில் உள்ளது.

சக மனிதனின் வேதனையை புரிந்து கொள்ளாத வரை நாம் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பயன் எதுவும் இல்லை.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.