போதிய ஆர்டர்கள் இல்லாததால், கோவையில் தங்க நகை பட்டறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு…
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் கோவை, தமிழகத்தின் மாபெரும் தொழில் நகரம் ஆகும். கோவை மாவட்டத்தில் 25,000-க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பட்டறைகளில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நகை பட்டறை தொழில் பெரும் சரிவை சந்தித்தது.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், போதிய ஆர்டர்கள் இல்லாததால், தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க நகை பட்டறை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சொந்த மாநிலங்களுக்கு சென்ற சக தொழிலாளர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை என்றும், தங்கம் விலை உயர்ந்துள்ளதால் மிகக்குறைந்த அளவிலேயே ஆர்டர்கள் வருவதாகவும் நகை பட்டறை தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கும் நகை பட்டறை உரிமையாளர்கள், தங்க நகை பட்டறை தொழிலுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தொழில் முடங்கியுள்ள நிலையில் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அடுத்த மாதம் முதல் ஆர்டர்கள் அதிகரிக்கும் என நம்புவதாகவும் தங்க நகை தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், தங்க நகை பட்டறை தொழிலை மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே, நகை பட்டறையை நம்பி பிழைப்பு நடத்துவோரின் கோரிக்கையாக உள்ளது.