புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதில் உள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம். அங்கன்வாடி முதல் 12-ம் வகுப்பு வரை 5 -3- 3 -4 என்ற முறையில் கல்வி வரிசை இருக்கும். கற்றலின் முக்கிய நோக்கத்தை மாணவர்கள் அறிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு சிந்தணையை துண்டக்கூடிய பாடத்திட்ட முறை இருத்தல் வேண்டும். இதற்கான புதிய பாடத்திட்ட முறையினை வரும் கல்வியாண்டில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்கும்
5-ம் வகுப்பு வரை அல்லது 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தாய்மொழியில் கல்வி பயில வேண்டியது அவசியம். பள்ளி அளவில் அயல்மொழிகள் அறிமுகப்படுத்தப்படும். 3,5,8-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கட்டாயம். வெளிப்படையான மற்றும் திறனை அறியக்கூடிய வகையில் ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களை திறன் வாய்ந்தவர்களாக மாற்ற தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மூலம் 2022-ம் ஆண்டிற்குள் தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான பணி சார் திறன்கள் குறித்து வழிகாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. 2030-ம் ஆண்டில் B.Ed படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும். ஆசிரியர் ஆவதற்கான தகுதி இனி ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும்.
2035-ம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் சேரக்கூடியவர்களின் தேசிய சராசரியை 50 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2035-ம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் மூன்றரை கோடி புதிய இடங்கள் உருவாக்கப்படும். தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும். மருத்துவம் மற்றும் சட்டம் தவிர்த்து அனைத்து உயர்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். உயர்கல்வியை ஒழுங்குமுறைபடுத்துதல், உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம், உயர்கல்விக்கான பாடத்திட்ட வடிவமைப்பு உள்ளிட்டவைகளுக்காக அமைக்கப்படும் தனித்தனி அமைப்புகளும் தேசிய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படும்.
தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் ஆன்லைன் கல்வி முறையை பலப்படுத்தவும், கற்பித்தல் பணியில் ஆன்லைன் கல்வி முறையை ஒரு அங்கமாக மாற்றிட, ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதற்கென பிரத்யேக பிரிவு உருவாக்கப்படும். 2021-ம் ஆண்டில் புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும். 2022-ம் ஆண்டிற்குள் மேம்படுத்தப்பட்ட புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் முறை அமல்படுத்தப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2022- 2023-ம் ஆண்டிலும் 12-ம் வகுப்பில் 2024-2025-ம் ஆண்டிலும் மாற்றம் கொண்டுவரப்படும்
மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்யப்படவேண்டும். பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப் பையின் சுமையை குறைக்க வேண்டும். ஒவ்வொரு கல்வியாண்டிலும் தொடக்கக் கல்வி அளவில் புத்தகப்பை இல்லா தினம் என்ற ஒன்றை அனுசரிக்க வேண்டும். தொடக்கல்வி, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளை கையாளும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயர் மத்திய கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றப்படும்