“பாகிஸ்தான்” உடனான நட்பை முடித்து கொண்ட “சவுதி அரேபியா”…
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு கடன் மற்றும் பெட்ரோலியம் வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்திக் கொண்டுள்ளது. இதன்மூலம், பல ஆண்டுகளாக நீடித்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் நட்பு நாடுகளாக இருந்துவந்தன. பாகிஸ்தானுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்குவதாகவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெட்ரோலியத்தை கடனுக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் சவுதி அரேபியா அறிவித்தது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை, சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி குற்றம்சாட்டியிருந்தார். கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதையும், பெட்ரோலியத்தை விநியோகிப்பதையும் சவுதி அரேபியா முடித்துக் கொண்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவை சமாதானப்படுத்த அந்நாட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அடுத்த வாரத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.