பழவேற்காடு ஏரியில் நிரந்தர கடலரிப்பு தடுப்பான்கள்…
மீன்வளத்துறை சார்பில் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ரூ.27 கோடி செலவில் கடலரிப்பு தடுப்பான் அமைக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் உள்ள பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகள் சேர்த்து மொத்தம் 60 கிமீ நீர்ப்பரப்பு கொண்டது. ஆந்திர பகுதியில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது.தமிழக பகுதியில் 15 ஆயிரத்து 367 ஹெக்டேர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உப்புநீர் ஏரியாகும்.
இந்த ஏரி முக்கிய சுற்றுலா தளமாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள், விருந்தோம்பல் சேவை வழங்குவோர், சுற்றுலா பயணிகளுக்கான சேவைகளை வழங்குவோர் உள்ளிட்டோரின் முக்கிய வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.இந்திய கிழக்கு கடற்கரை பகுதியில் கடலோர மண் நகர்வு காரணமாக மணல் திட்டுக்கள் ஏற்படுவதும், கடற்கரை மணல் இடம்பெயர்வதும் பொதுவான நிகழ்வாக உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் மூடுகிறது. இதனால் கடல் அலை, கடல் நீர் ஏரிக்குள் செல்வது தடைபட்டு, ஏரியின் அனைத்து வளங்களும் அழிவுநிலைக்கு செல்கின்றன. மீனவர்களின் படகுகளும் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் ரூ.27 கோடியில் முகத்துவாரப் பகுதியில் 50 மீட்டர் நீளத்துக்கு கடலரிப்பு தடுப்பான் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதை அமைப்பதன் மூலம் ஆண்டின் அனைத்து பருவங்களிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல நீர் வழி கிடைக்கும். கறுப்பு நிற பழவேற்காடு ஏரி நீரில் கடல் நீர் கலந்து இறால் உற்பத்திக்கு நல்ல சூழலை ஏற்படுத்தும். அப்பகுதி பொருளாதார வளர்ச்சிக்கு இந்த கடலரிப்பு தடுப்பான் முக்கிய பங்காற்றும் என மீனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து மதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி, அவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் பழவேற்காடு மீன் சந்தை அரங்கத்தில் அக்டோபர் 29-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.