நேற்றைய சி.எஸ்.கே போட்டியின் சுவாரஸ்யங்கள் – ஆயிரம் ரன்களைக் கடந்த வாட்சன்
சென்னை அணியின் நட்சத்திர வீரர் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1000 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை நிகழ்த்தினார். சென்னை அணிக்கு இந்த சாதனை நிகழ்த்தும் எட்டாவது வீரர் வாட்சன். சென்னை அணிக்காக 35 போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களை குவித்துள்ளார்.சென்னை அணியின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் டூ பிளஸில் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஐபிஎல் போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்து அசத்தினார். 74 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.டெல்லி அணி வீரர் பிரித்வீ ஷா நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 23 ரன்கள் எடுத்திருந்தபோது ஐபிஎல் அரங்கில் ஆயிரம் ரன்களை கடந்தார். 20 வயதே ஆன இளம் வீரரான பிரித்வீ ஷா 40 போட்டிகளில் விளையாடி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பேட்டிங்கில் தோனியின் பழைய ஆட்டத்தை பார்க்கமுடியவில்லையே என காத்திருக்கும் ரசிகர்களுக்கு நேற்றைய ஆட்டத்தில் அவருக்கே உண்டான பாணியில் ஸ்டெம்பிங் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சாவ்லா வீசிய பந்தை மிஸ் செய்த ப்ரிதீவ் ஷாவை மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
ஸ்டெம்பிங்கில் அசத்தியது போல் டைவ் அடித்தும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் கேப்டன் தோனி. சாம் கரண் வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முயலும் ஸ்ரேயஷ் ஐய்யரை டைவ் அடித்து கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச்செய்வார் கீப்பர் தோனி. 39 வயதாகிவிட்டது, பிட்னஸ் போய்விட்டது என விமர்ச்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தோனி.
டி.ஆர்.எஸ் என்றாலே தோனி ரிவியூ சிஸ்டம் என சொல்லும் ரசிகர்களுக்கு நேற்றைய போட்டியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆட்டத்தின் இரண்டாவது பந்தை சஹர் வீசியபோது பிரித்வீ ஷா பேட்டில் லோசாக உரசி சென்றுவிடும் இதை லாவகமாக கேட்ச் பிடித்துவிடுவார் தோனி. நடுவருக்கு சத்தம் கேட்காததால் அவுட் கொடுக்கவில்லை. பின்பு ரிபிளே செய்து பார்க்கும் போது அவுட் என தெரியவரும். தோனி ரிவியூ எடுத்திருந்தால் ஆரம்பத்திலேயே பிரித்வீ ஷா ஆட்டமிழந்து வெளியேறியிருப்பார் என ரசிகர்கள் புலம்புகின்றனர். இதற்கு முன் மைதானத்தில் ரசிகர்கள் எழுப்பும் உற்சாக குரல் தான் இது போன்ற சத்தம் கேட்காததற்கு காரணம் என குறை கூறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்தது.