நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் மேலும் தாமதம். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை வெளியேறிய பின் தமிழ்நாட்டிற்கு மழை தர கூடிய வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும். இந்தாண்டு தற்போது வரை இந்திய – பசிபிக் கடற்பகுதியில் நிலவ கூடிய வெப்பநிலை காரணமாக தொடர்ந்து தென்மேற்கு திசையில் காற்று வீசும் சூழல் நிலவி வருகிறது.
மேலும் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை. இதனால் வரும் 25 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை கால தாமதமாக வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் சூழல் நிலவுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.