“நல்ல வேலை கவர்ன்மெண்ட் ஸ்கூல படிச்சோம்” – டெல்லிவாசிதான் இதைச் சொல்ல முடியும்!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது, இந்த தேர்வில் டெல்லி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளனர். குறிப்பிட்ட மாணவர்கள், “அரசுப் பள்ளியில் படித்தது பெருமையாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த ரித்துகுமாரி 97. 2 சதவீதமும், குஷ்பு 96. 6 சதவீதமும், தீபக் 96. 2 சதவீத மதிப்பெண்களையும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் பெற்றுள்ளனர். இதுகுறித்து குறிப்பிட்ட மாணவர்கள் கூறுகையில், “அரசுப் பள்ளியில் படித்ததே எங்களுக்கு இந்த மதிப்பெண்களை எடுக்க முடிந்தது. உண்மையில் எங்களுக்குக் கிடைத்த கல்வி அழகானது” என்றனர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96. 2 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ள தீபக்கின் தந்தை லால் தேவ் தச்சு தொழில் செய்து வருபவர். லால் தேவ், “எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக 8ஆம் வகுப்பு முதல் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், டெல்லி அரசுப் பள்ளிகளைப் பார்க்கும்போது முதல் வகுப்பிலிருந்தே ஏன் அரசுப் பள்ளியில் சேர்க்காமல் விட்டேன் என வருத்தமாக உள்ளது” என வேதனை தெரிவிக்கிறார்.
மதிப்பெண்களைக் குவித்து அசத்திய தீபக், “தனியார்ப் பள்ளிகளை விட, அரசுப் பள்ளிகள் நல்ல கல்வியைக் கொடுக்கிறது. இரு வகையான பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசுப் பள்ளி ஆசியர்கள் அதிகம் படித்தவர்கள், அனுபவமும் அதிகமாகக் கொண்டவர்கள்” எனப் புகழ்கிறார். அதேபோல்தான் மற்றொரு சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவரான ரித்து குமாரி என்பவரின் கதையும். தந்தை காய்கறிகளை விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். ரித்து குமாரி சிறு வயது முதலே அரசுப் பள்ளியில் பயின்று வருபவர்.
ரித்துவுக்கு பொலிட்டிக்கல் சைன்ஸ் படிப்பில் ஆர்வம் உள்ளது. அரசியல்வாதியாக அவதாரம் எடுக்க வேண்டும் என்ற கனவோடு, அவர் இப்போது டெல்லி இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கத் தயாராகி வருகிறார். மேலே குறிப்பிட்ட இருவர் கதையிலும், அவர்கள் பெற்றோர் அனைத்து நேரத்திலும் உறுதுணையாக இருந்தனர். ஆனால், வடகிழக்கு டெல்லி நந்தி நகரைச் சேர்ந்த குஷ்புவிற்கு அந்த துணை கிடைக்கவில்லை.
இந்த நிலைக்கு அரசுப் பள்ளிகள் சென்றது, டெல்லியில் புதிய புரட்சி உருவெடுத்துள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது. நமது ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் தலை சிறந்த ஆசிரியர்கள் உள்ளனர், ஆனால் பள்ளிகளை அடைக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த நிலை மாறி, நாம் டெல்லியை விஞ்ச வேண்டும் எனக் கல்வியாளர்கள் ஆசைப் படுகின்றனர்.