திமுகவின் பொதுக்குழு இன்று கூடுகிறது…
திமுகவின் பொதுக்குழு கூட்டம் என்றால், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கூடுவார்கள். அண்ணா சாலையே போக்குவரத்தால் ஸ்தம்பித்து போகும்.. ஆனால் கொரோனா பரவல் காரணமாக முதன்முறையாக இணையம் வாயிலாக திமுக பொதுக்குழு நடக்கிறது.சுமார் 3,000கும் அதிகமான உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை திமுக தலைமை செய்துவருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலிருந்தும் 75 பேர் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமாக பொதுக்குழுவில் 20லிருந்து 30 பேர் உரையாற்றுவார்கள். ஆனால், இந்தாண்டு கூட்டத்தில் 10 பேர் மட்டுமே உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பொதுக்குழுவின் முக்கிய நோக்கமே, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பொதுச் செயலாளர், பொருளாளரை அறிவிப்பதுதான்.நீண்ட காலமாக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் மறைவுக்கு பின் காலியாக உள்ள அப்பதவிக்கு துரைமுருகனும், புதிய பொருளாளராக டி.ஆர்.பாலுவும் அறிவிக்கப்பட உள்ளனர். இருவருக்கும் எதிராக யாரும் போட்டியிடவில்லை என்பதால், போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா சமூகத்தினருக்கும் வாய்ப்பு என்ற ரீதியிலும், அதிமுக வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்திற்கான பிரதிநிதித்துவம் என்ற வகையிலும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் தங்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் பாஜகவின் அரசியல் முன்னெடுப்பை எதிர்கொள்ள பட்டியலினத்தைச் அல்லது சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பொதுக்குழுவிற்கு பிறகு திமுகவின் பலம் புரியும் என்று ஸ்டாலின் கூறியதற்கு நாளைய கூட்டத்தில் பதில் கிடைக்கலாம்.