திடீர் ஓய்வு ஏன்…? தோனியின் நெருங்கிய நண்பர் விளக்கம்…
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவித்தார். 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பின், அணியில் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீரென தோனி ஓய்வு அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இது குறித்து தோனியின் பிசினஸ்ட் பார்ட்னரும், நெருங்கிய நண்பருமான அருண்டே பாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எனக்கு தெரியும், ஆனால் இது சரியான நேரமா என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவர் தான் முடிவு செய்தார். ஐ.பி.எல் தொடருக்கு அவர் தயாரனார். ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது, பின் டி20 உலகக்கோப்பையும் ஒத்திவைக்கப்பட்டது. அவர் மனதளவில் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்துள்ளார்.
ஆனால் ஒன்று நிச்சயம். அவர் ஓய்வுக்கு பின் ராணுவத்தில் அதிக நேரம் செலவிடுவார். அவர் தனது வர்த்தக முயற்சிகளிலும், பிற கடமைகளிலும் நேரம் செலுத்துவார். அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். ஓய்வு பெற்ற பின் கிரிக்கெட் வீரர்களின் பிராண்ட் மதிப்பு குறைந்து விடும். ஆனால் தோனிக்கு அதுப்போன்று நடக்காது என்று நினைக்கிறேன்“ என்றுள்ளார்.