தலித் ஒருவரை காலில் விழவைத்து வன்கொடுமை…
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்ததாக 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓலைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்டவர். இவர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து ஆடுமேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கு என்பவரும் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 8-ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய ஆடு, சிவசங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவசங்கு, பாதிக்கப்பட்டவரை தாக்கி, சாதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
சிவசங்கு அடிக்க வரும் போது பாதிக்கப்பட்டவர் தடுத்ததால் அந்தக் கம்பு சிவசங்கு மீது பட்டுள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் சிவசங்கர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் பாதிக்கப்பட்டவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பகுதிக்கு வந்து, தகராறில் ஈடுபட்டது மட்டுமின்றி, அவரை காலில் விழ வைத்துள்ளனர். இது குறித்து கேள்விப்பட்டதும் பால்ராஜ் மகன் கருப்பசாமி விரைந்து சென்று தடுக்க முயன்றுள்ளார், அவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். மேலும் தனது அப்பா தாக்கப்படுவதை கருப்புசாமி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை பார்த்த சிவசங்கு உறவினர்கள், அந்த செல்போனை வாங்கி எடுத்த வீடியோக்களை அழித்து, செல்போனை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவசங்கு உறவினரான கார்த்திக் என்பவர் பாதிக்கப்பட்ட நபர், சிவசங்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டதால் பிரச்சனை பெரிதாக உருவானது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் கயத்தாறு போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து சிவசங்கு, சங்கிலி பாண்டியன்,
பெரிய மாரி.. வீரய்யா, மகேந்திரன், மகாராஜன், கார்த்திக் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.