இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இப்பணியை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முதற்கட்டமாக இந்தக் கொரோனா தடுப்பூசி மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 8 ஆம் தேதி முதலே கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை துவங்கி விட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இதற்காக தமிழகத்தில் 166 மையங்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுதப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது தமிழகத்தில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், நம் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களே இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளும்போது நான் நிச்சயமாகப் போட்டுக் கொள்ளுவேன் எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்தவ பணியாளர்களுக்குத்தான் முதலில் தடுப்பூசி போடப்படும். முதல் டோஸ் போட்டப்பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். அதன்பிறகு அவர்கள் பாதுகாப்பாக இருப்பர். பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இது பிரதமரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே 266 இடங்களில் தடுப்பூசி போடும் ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது. இப்போது 166 இடங்களில் அது நடைமுறைப்படுத்தப் படவுள்ளது. இதை வரலாற்று சிறப்பாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கருத்துத் தெரிவித்து இருந்தார்.