சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பேசிய ஜோதிகா கோவில்கள், மருத்துவமனைகள் குறித்துப் பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
சூர்யா கொடுத்த அறிக்கையில்,
ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஜோதிகா தெரிவித்த கருத்தில் தங்கள் தரப்பு உறுதியாக இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாகக் கருதவேண்டும் எனும் கருத்தைதான் ஜோதிகா அண்மையில் வலியுறுத்தியதாகவும் இதை சிலர் குற்றமாகப் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களே சொல்லியிருப்பதாக அவர் அறிக்கை குறிப்பிட்டுள்ளார். “மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்துச் சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
அறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் எண்ணங்களைப் பின்பற்றி ஜோதிகா வெளிப்படுத்திய கருத்தில் தங்கள் தரப்பு உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மதங்களைக் கடந்து மனிதநேயமே முக்கியம் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
“பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாகக் கருத வேண்டும் என்ற கருத்தை எல்லா மதத்தினரும் வரவேற்கவே செய்கின்றனர்.
“கொரோனா கிருமித் தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது,” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும்போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் தங்களுக்கு துணை நிற்பதாகவும் சூர்யா கூறியுள்ளார்.
“முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இந்த சர்ச்சையைக் கையாண்டன.
‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்,” என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜோதிகா தமது பேச்சுக்கு வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும் என மிகத் தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில், சூர்யா இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்புக்கு வித்திட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் அறிக்கையை குறிப்பிட்டு ‘சிறப்பு’ என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.