ஜிம் செல்ல சரியான நேரம் எது..?
உடற்பயிற்சி செய்ய ஜிம் செல்வது இன்று தினசரி வாழ்க்கை முறையோடு ஒன்றாகிவிட்டது. ஜிம் செல்லும் நேரம் என்பதும் குறிப்பிட்ட நேரத்தில் இல்லாமல் எப்போது வேண்டுமென்றாலும் போகலாம் என்பதால் நினைத்த நேரத்தில் செல்வதும் தவறான செயல். எனவே எப்போது செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்று பார்க்கலாம். சிலர் காலை எழுந்ததும் சுறுசுறுப்புடன் உடற்பயிற்சியிலிருந்து அந்நாளைத் துவங்குவார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால் ஆய்வின் மூலம் அறியப்பட்டதில் மாலை 4 மணி என்பது உடற்பயிற்சிக்கு சரியான நேரம் எனப் பரிந்துரைக்கின்றனர். அதேபோல் அந்த நேரத்தில் பயிற்சி செய்யும்போது மற்ற நேரத்தைக் காட்டிலும் நம் வேகமும் அதிகமாக இருக்குமாம்.
உடற்பயிற்சிக்கு உடல் வெப்பம் அவசியம் என்கின்றனர். ஏனெனில் உடல் சூடு அதிகமாக இருக்கும்போது தசைகள் இலகுவாக இருக்கும். அதோடு கலோரிகளும் வேகமாகக் கரையும். இதனால் எளிதில் எந்த பயிற்சியையும் மேற்கொள்ளலாம். நீண்ட நேரம் பயிற்சி செய்யலாம். எனவே மாலை 4 மணிக்கு உடற்பயிற்சி செய்யும்போது காலையிலிருந்து உடல் ஆற்றலில் இருப்பதால் தசைகள் இலகுவாக இருக்கும். அதேசமயம் உடல் வெப்பநிலையும் ஏதுவான அளவில் இருக்கும். ஆய்வாளர்கள் சரியான 4 மணி என்றில்லாமல் மதிய நேரத்தில் எப்போது செய்தாலும் நல்லது என்கின்றனர்.
உடற்பயிற்சிக்கான அமெரிக்க கவுன்சில் பரிந்துரைப்பதில் உங்கள் உடல் எந்த நேரத்தில் தன்னை தகவமைத்துக்கொள்கிறதோ அதுதான் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கான சரியான நேரம் என்கின்றனர். அதேபோல் நினைத்த நேரத்தில் செல்லாமல் குறிப்பிட்ட நேரத்தை வகுத்துக்கொண்டு அந்த நேரத்தில் தினசரி பயிற்சி செய்யுங்கள். ஏனெனில் உடல் அந்த நேரத்திற்கு தன்னை பழக்கப்படுத்திக்கொள்ளும். அந்த நேரம் வரும் போது உடலும் தயார் நிலையில் இருக்கும். ஜிம் செல்ல முற்பட்டால் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தைத் தவிருங்கள். இதனால் நீங்கள் ஒரு கருவியைப் பயன்படுத்த நினைக்கும்போது அதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இதனால் தேவையற்ற காத்திருப்புகளைத் தவிர்க்கலாம். எனவே அடுத்த முறை ஜிம் செல்லும்போது இவற்றை நினைவில் கொள்ளுங்கள்.