ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும் – சத்குரு
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த 74-வது சுதந்திர தினம் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு நாள். நம் பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு ஏராளமானோர் தங்களின் உயிரை அர்ப்பணித்துள்ளனர். நம் தேசம் அடிமைத்தனத்தில் இருந்து வெளி வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர்கள் பலவிதமான கஷ்டங்களை சந்தித்தார்கள். கடந்த 74 ஆண்டுகளில் நம் நாட்டின் முன்னேற்றத்தில் பல படிகளை எடுத்துள்ளோம். இருப்பினும், நம் தேசத்தில் தோராயமாக 35 சதவீதம் மக்களுக்கு இன்னும் முழுமையான உணவு கிடைக்காத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ஜாதி, மதம், மொழி, கட்சி மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் நாட்டில் பிரிவினைகளை உருவாக்க வேண்டாம். நாம் பேசும் மொழிகள், உண்ணும் உணவு வகைகள் என அனைத்திலும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. நம் நாட்டில் பல மதங்கள் இருக்கின்றன. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் நமது கலாச்சாரத்தை வண்ணமயமாக்கும் ஒரு சொத்தாக நாம் பார்க்க வேண்டும். பிரிவினையை உருவாக்கும் விஷயமாக பார்க்க கூடாது.
நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆனால், நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் எல்லோரும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக புத்துணர்வுடன் செயல்பட வேண்டும்.
நம் தேசத்தில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது சாதாரண விஷயம் அல்ல. அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைவு பெற்ற பிறகு நம் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கு ஒரு மகத்தான வாய்ப்பு காத்திருக்கிறது. வேறுபாடுகளை கடந்து ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால் அடுத்த 10, 20 வருடங்களில் தோராயமாக 50 கோடி மக்களின் வாழ்க்கை சூழலை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்த முடியும். இதை வெற்றிகரமாக செய்து காட்ட வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அருள். தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.